Sunday 29 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 21

Rate this posting:
{[['']]}
அப்பா என்பது அப்பா என்பது அப்பா
  
மகாத்மா காந்தி மருத்துவமனையின் உயிர்காக்கும் பிரிவில் சேர்த்திருந்தார்கள் சங்கரநாராயணனை.  நிறைய மருத்துவ அறிகுறிகளையெல்லாம் சொல்லி கடைசியில் நீள் உறக்கத்திற்குச் சங்கர நாராயணன் சென்றுவிட்டதாகவும். அதிலிருந்து அவரை எழுப்ப முயற்சிப்பதாகவும் மருத்துவர் சொன்னபோது அந்த வராண்டாவில் உட்கார்ந்து அப்படியே ஒப்பாரி வைத்து அழுதாள் சங்கரநாராயணனின் மனைவி வேதவல்லி.
                        அவன் நல்லாவே இருக்கமாட்டான்.. அவனை பெத்த இந்த வயித்துல பெரண்டய வச்சு கட்டணும்.. இல்லாட்டி அர்ருவாமனையிலே அறுத்துப்போடணும். என் வயிறு எரியுது.. அவன் உருப்படவேமாட்டான்.. நாந் சொல்றேன் ஒருவேள சோத்துக்கு ஆளா பறப்பான் பாரு..
                        விடும்மா.. அவன பேசாத.. நம்ப விதி.. என்றாள் நர்மதா. மூத்த மகள்.
                        இன்னொருபுறம் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தான் குமரன் , மூத்த மகன்.  கேள்விப்பட்டு ஒரு கூட்டமே மருத்துவமனையை மொய்த்துக் கிடந்தது.
                        எதுக்கு இத்தனை பேரு? டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தா திட்டுவாரு.. முதல்ல ரெண்டுபேரை எல்லாரும் வெளியே போங்க.. வெள்ளையுடைத் தாதி குரலெடுத்து எச்சரித்துவிட்டுப்போனாள்.
                        வேதவல்லி, நர்மதா இருவரையும் விட்டுவிட்டு எல்லோரும் வெளியே வந்தார்கள்.
                        பெரிய நிலப்பரப்பில் அந்த மருத்துவமனை அமைந்திருந்தால் வெளிப்பரப்பு நன்றாக விரிந்து கிடந்தது. நிறைய மாமரங்களும் வேப்பமரங்களும் நிழல்பரப்பிக் கிடந்தன. அருகே  பெஞ்சுகளைப் போட்டிருந்தார்கள். சுகமான நிழல் அது. அங்கே போய் உட்கார்ந்தார்கள்.
                        இத்தனைக்கும் காரணமான  சங்கர நாராயணனின் சின்ன மகன் ரவியும் அங்கே தலைகுனிந்து யார் என்ன பேசினாலும் பதில் பேசாது நின்றுகொண்டிருந்தான். அவன் வலது கையில் பெரிய கட்டுப்போடப்பட்டிருந்தது. அந்தக் கட்டையும் மீறி ரத்தம் சிவப்புக் காட்டிக்கொண்டிருந்தது.
                        சங்கர நாராயணன்  வருவாய்த்துறையில் தாசில்தாராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். எதற்கும் லாயக்கற்றவர் என்று அலுவலகத்தில் பெயர் எடுத்தவர். அதாவது பணியில் லஞ்சம் வாங்காமல் அதுவும் வருவாய்த்துறையில் 32 ஆண்டுகள் பணிபுரிந்தவர். வேலையில் சிங்கம். தனிமனித ஒழுக்கம் நேர்மை இவை முக்கியம் என்று வாழ்ந்தவர். ஆகவே கடைசிவரை அவருக்கு மிஞ்சியது ஓட்டுவீடும் பென்ஷனும்தான்.  மூன்று பெண்கள் இரண்டு பிள்ளைகள். முத்தவள் நர்மதா, நடு சாரதா, அடுத்து காயத்ரி, பிள்ளைகளில் பெரியவன் குமார், கடைசி ரவி.
                        யாருக்கும் பாரபட்சமில்லாமல்தான் வளர்த்தார். அன்பு காட்டினார்.  அவரவர்  தங்களால் முடிந்தவரை ஆளுக்கொரு படிப்பு படித்தார்கள். அதற்கேற்ப வாழ்க்கையையும் அமைத்துக்கொடுத்தார். இளைவன் ரவி கொஞ்சம் துடிப்பானவன். அவனுக்கு சேர்மானம் சரியில்லாமல் பள்ளிப்படிப்பிலேயே நின்றுபோனது. இருந்தாலும்  விட்டுவிடக்கூடாது அவனின் வாழ்க்கைக்கு என்னென்னவோ முயற்சிகள் எடுத்தும் பலனற்றுப்போனது. எதிலும் நிலைப்பதில்லை. எந்த வேலையையும் குறைசொல்லி அதை விட்டுவிடுவதை இயல்பாக்கிக்கொண்டதால் நிரந்தர வேலை இல்லாமல் போனது.
                        ஒரே ஆளோடியாக உள்ள வீடு. அறைகளற்ற வீடு. தடுப்பு அறையாக இருந்தது பூசையறை மட்டுமே.  எதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டேயிருந்தது.
                        எல்லார் வாழ்க்கையும் அமைஞ்சுடிச்சி..ரவிய நினைச்சாத்தான் கவலையா இருக்கு.. இந்த கடவுளுக்கு கண் இல்ல அவன் வாழ்க்கையை இப்படி அம்போன்று விட்டுட்டான்  என்பாள் வேதவல்லி.
                        அவங்கஅவங்க வாழ்க்கை கடவுள்கிட்ட இல்ல. தானா வழிகாட்டுனா புத்தியா பொழச்சுக்கணும்.. எப்பவும் உழைக்காம பணமும் ஊர சுத்தணும்னு நெனச்சா எப்பவும் எதுவும் நிக்காது.. சங்கரநாராயணன் கோபமாகப் பேசுவார்.
                        வேலைதான் தாசில்தாருன்னு பேரு.. அஞ்சு பைசாவுக்கு பிரயோசனம் உண்டா.. அவஅவ என்ன்னமோ பண்ணி மாடிவீடும் காரும்னு சொகுசா.. இருக்கறான். நான் காந்தியோட தம்பி.. லஞ்சம் வாங்கமாட்டேன்.. நேர்மைன்னு.. இங்க குடும்பம் நக்கிட்டுப்போவுது.. பெத்த புள்ளக்கி ஒரு வேல வாங்க துப்பில்லாத தாசில்தாரு உத்தியோகம்..
                        இப்படியே பலநாட்கள் சண்டை நடந்தவண்ணம் இருக்கும்.
                        அன்றைக்கும் அப்படித்தான்.
                        நேரடியாக ரவியிடம் கேட்டார்.. என்னதாண்டா நெனச்சிக்கிட்டிருக்கே.. இப்படியே ஊர சுத்தினா வாழ்க்கை போயிடுமா..
                        என்னிஷ்டம்.. எனக்குத் தெரியும். உங்க வேலய பாருங்க.. ஒரு வேல வாங்கிக்குடுக்க துப்பில்ல.. பெரிசா பேச வந்துட்டீங்க..
                        ஏன் துப்புகெட்டவன் வீட்டுலே இருக்கே.. நீதான் எல்லாம் தெரிஞ்சவனாச்சே.. எங்காச்சும் போய் ஒரு வேல வாங்கிக்க வேண்டியதுதானே..
                        இந்தப் பேச்சு வளர்ந்தபோது அன்றைக்கு சங்கர நாராயணனின் அப்பாவின் திவச நாள். எல்லா ஏற்பாடுகளும் செய்துகொண்டிருந்தார்கள். ஐயர் மட்டும் வரவில்லை.
                        சட்டென்று ரவி கோபமாகி உள்ளவனுக்கே பொழப்பு இல்லியாம்.. இப்பத்தான் செத்தவனுக்கு தெவசம் கேக்குதா என்று எல்லாவற்றையும் போட்டு உடைத்தான். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த நிறைய போட்டோக்களை எடுத்துப்போட்டு உடைக்க வீடெங்கும் கண்ணாடிசில்லுகள். அவன் கையில் குத்தி ரத்தம் வழிந்தது.
                        புள்ளயாடா நீ.. எங்காச்சு போய் தொலைடா.. ஒரு பொருள வாங்கி வக்க துப்புகெட்ட நாயி.. உடைக்கறதுக்கு என்னடா உரிமை இருக்கு.. என்றபடி கையை ஓங்கி அவனை அடிக்கப்போக.. அப்படியே அவர் கையைத் தடுத்து.. அவர் குரல்வளையில் இரு கைகளையும் வைத்து அழுத்தி நீ செத்துப்போயா.. எல்லாம் சரியாயிடும் என்று அழுத்த சங்கரநாராயணன் எதிர்பார்க்கவில்லை இந்த எதிர்தாக்குதலை.. முச்சு திணற..
                        வேதவல்லி ஓடிவந்தாள்.. அட கொலைகாரப் பாவி.. அவங்கள உடுடான்னு.. ஓடி வந்து ரவியைப் பிடித்து தள்ளினாள்.
                        ரவியின் கைகள் விலக அப்படியே சங்கர நாராயணன் பின்னால் சரிந்தார். பின்னாலிருந்தது மரக்குதிரு. அதில் அவர் சாய்ந்து அப்படியே கீழே மல்லாக்கா விழுந்தார். உடலின் பின்பக்கம் முதுகு, இடுப்பு, கெண்டைக்கால்கள் என கண்ணாடிச் சில்லுகள் ஏறின. அப்படியே மயக்கமானார். பேச்சு மூச்சு இல்லை.
                        அய்யய்யயோ என்று வேதவல்லி அலறிய அலறலில் தெரு கூடிவிட்டது.
                        யாராச்சும் ஆட்டோவுக்கு சொல்லுங்கப்பா..ஆட்டோ வந்ததும் அதில் அவரைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். மருத்துவமனையில் அவர் உடம்பில் ஏறிக்கிடந்த கண்ணாடிச் சில்லுகளை எடுக்கவே நேரம் பிடித்தது. அப்புறம்தான் ரத்தம் எடுத்து எல்லாம் பரிசோதித்தார்கள்.
                        பதட்டத்துல சுகர், பிபி எல்லாம் ஏறிடிச்சி.. மூளைக்குப் போற ரத்தக் குழாயில லேசா கசிவு தெரியுது.. பலமா அதிர்ச்சியாயிருக்கார்.. என்ன நடந்துச்சு?
                        கடைசியில் நீள் உறக்கம்.
                         ரவி இயல்பில் அப்படிப்பட்டவன் இல்லை. என்றாலும் அவனுக்கு இந்த வாழ்க்கையின் மீதே ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்தது.  எல்லோரும் ஓரளவுக்குப் படித்து நல்ல நிலையிலிருக்க அவனின் நட்பு அவன் வாழ்வை சிதைத்துவிட்டது. வயதும் ஏறிவிட்டது இனி நிரந்தர வேலை என்பது கிடையாது. இத்தனைக்கும் அவனுக்கு சங்கர நாராயணனை ரொம்பவும் பிடிக்கும். தன் மிருக செயலை நினைத்து மனசுக்குள் அழுதான். அப்பா எப்படியும் பிழைச்சுக்கணும் என்று கடவுளை வேண்டி நின்றான்.
                        அப்பாவை நினைத்துப் பார்த்தான்.
                        சின்ன வயதில் அப்பாவின் அக்குளில் முகம் புதைத்துத் தூங்கினால்தான் தூக்கம் வரும். அடுத்து அண்ணன் குமார் படுத்திருப்பான். இரவில் அப்பா நிறைய கதைகள் சொல்லுவார். எல்லாம் நீதிக்கதைகள்தான். ஒருமுறை அப்படி தூங்கும்போது ஒரு கருந்தேள் அப்பாவின் விரல்களில் கொட்டிவிட நடுஇரவிலும் அது தேள் என்று உணர்ந்துகொண்டு அப்படியே தேளை கையால் அழுத்தி நகராமல் பிடித்துக்கொள்ள தேள் தொடர்ந்து கொட்டத் தொடங்கிவிட்டது. தன் வலியையும் பொறுத்துக்கொண்டு அப்படியே குமாரை முதலில் இடது கையால் தள்ளிவிட்டு பின் ரவியையும் தள்ளிவிட்டு யாராச்சும் லைட்ட போடுங்க என்று கத்தி பின்னர் தேளை அடித்தார்கள். ஆனால் தொடர்ந்து கொட்டியதில் விஷமேறி அப்பா ஒருவாரம் மருத்துவமனையில் இருந்து சரியாகி வந்தார்.
                        எப்பவும் ஆண்டு தேர்வு முடிந்து பள்ளி விடுமுறை விட்டுவிட்டால் விடுமுறையிலே அடுத்த ஆண்டிற்கான புத்தகங்கள் நோட்டுகள் பேனா பென்சில் ரப்பர்கள் எல்லாம் வாங்கி வைத்துவிடுவார். நோட்டு, புத்தகங்களுக்கு அழகாக அட்டை போடுவார். முதலில் செய்தித்தாளில் அட்டைபோட்டு அப்புறம் புரவுன் சீட்டில் போடுவார். லேபில் ஒட்டி அழகாக பெயர் எழுதி பூசையறைக்கு பக்கத்தில் சின்ன பெஞ்சு போட்டு அதில் அழகாக அடுக்கி வைத்துவிடுவார். அக்கா எல்லோருக்கும் பார்க்க படிப்புமேல ஆசைவரும்.  இது இல்லாம கூடுதலா நோட்டும் இன்னொரு செட்டும் புத்தகம் வாங்கி வச்சிடுவார்..  அரையாண்டுத் தேர்வுக்கப்புறம் பெரும்பாலும் சில புத்தகங்கள் கிழிந்துபோகும்.. காணாமல் போகும். அதுக்காக.. இப்படி எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்வார்.
                        சாப்பிட உட்கார்ந்தால் போதும் ஐந்து உருண்டைகள் உருட்டுவார். அந்த உருண்டைமேல குதிரை மேல ஆள் உக்காந்ததுமாதிரி வறுத்த உருளைக்கிழங்க வச்சு வாயில அடைக்கும்போது கண்ணுல தண்ணி வரும்.. சாப்பிடுங்க என்பார்..
                        திருவையாறு சப்த ஸ்தானம் நடக்கும் ஏழு ஊரும் சுத்தி கதைசொல்லி அழச்சிட்டு வருவாரு. அப்புறம் காவிரியாற்றைக் கடந்து அம்மா ஊருக்கும் போறதுக்கு. கோடைக்காலத்தில் அங்கங்கே குட்டை குட்டையா தண்ணி தேங்கி கிடக்கும். அங்க நடக்க விடுவார்.. மத்தபடி அப்பா கால் சுடுது.. சொன்னா போதும்..உடனே தோள்ல என்னையும் இடுப்புல அண்ணனையும் தூக்கிக்குவார்.. செருப்பில்லாத கால்களோடு கொதிக்கிற வெயில் சூட்டையும் பொறுத்துக்கிட்டு காவிரியைக் கடப்பாரு.. முகத்துல எந்த சோர்வும் கவலையும் இல்லாம..
                        இப்படி எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்தவர்..
                        ரவிக்கு நினைக்க நினைக்க அழுகை பொங்கி வந்தது. அப்படியே அப்பாவின் கால்களில் விழுந்து உயிரை விட்டுவிடலாம் தான் செய்த செயலுக்கு என்று தோனியது.
                        வெள்ளையுடை தாதி வந்து சொன்னாள்.
                        அவரு கண் முழிச்சிட்டாரு..
                        எல்லோரும் ஓடினார்கள்.. ரவியும் ஓடினான்.
                        சங்கர நாராயணன் கண் விழித்திருந்தார். எல்லோரும் மகிழ்ச்சி.
                        என்னங்க எப்படி இருக்கீங்க? என்றாள் வேதவல்லி.
                        அப்பா என்றழுதனர் பிள்ளைகள்.
                        கண்களை அகல விரித்து எல்லோரையும் ஒருமுறை பார்த்தார். அப்படியே கண்கள் நிலைகுத்தி ரவியின்மேல் பதிந்தது. வா என்று கண்களால் அழைத்தார். அருகே போனான் ரவி.
                        அவன் வலது கையைப் பாத்தார். ரத்தக்கட்டு. ரவி இன்னும் நெருங்கி அப்பாவை அணைத்துக்கொண்டான். அப்பா என்று மேலும் பேசமுடியாமல் அழுதான்.
                        சங்கர நாராயணன் ஏதோ பேசத் துடிப்பது தெரிந்தது.
                        ரவி அருகே குனிந்தான்.
                        தட்டுத்தடுமாறி வார்த்தைகள் வந்தன. …சாப்புட்டியா..
                        நினைவு கலைந்தான் ரவி.
                        முப்பதாண்டுகள் ஓடிவிட்டன  சங்கர நாராயணன் இறந்துபோய்.
                        நேரு முதியோர் இல்லம். இங்கு ரவி வந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் எத்தனையாண்டுகள் என்று தெரியவில்லை.  சாகும்வரை இந்த முதியோர் இல்லம்தான் என்று ஆகிவிட்டது. இது யாரும் எடுத்த முடிவல்ல. ரவியே எடுத்த முடிவு. அல்லது விதி அவனை அப்படி எடுக்க வைத்த முடிவு என்று சொல்லலாம்.
                        இல்லத்தின் வாசலில்  பச்சைநிற கார் வந்து நின்றது. அதிலிருந்து ஓர் இளைஞன் இறங்கினான்.  யாரிடமோ என்னமோ கேட்க அவர்கள் ரவியிருந்த இடத்தை நோக்கி கை காட்டினார்கள்.
                        உள்ளே வந்தவன் ரவியை ஒருமுறை பார்த்தான்.
                        ரவி எதுவும் பேசாமல் அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
                        வந்த இளைஞன் கேட்டான். அப்பா.. வாங்க போதும் வீட்டுக்குப் போகலாம். உங்க வனவாசம் முடிஞ்சுப்போச்சு..
                        இல்லப்பா.. நீ போ உன் வாழ்க்கை வேறு என் வாழ்க்கை  இது. யாரும் எதையும் மாத்தமுடியாது. இது வனவாசம் இல்ல.. வாழ்க்கை வாசம்.. இப்படித்தான் போகும்.. இது நானா எடுத்த முடிவு. அதனால யாரும் வருத்தப்படவேண்டியதில்ல.. போ.
                        சாப்புட்டியாப்பா.. என்று கேட்டான்.
                    இந்த சொல்லைக் கேட்டதும் நாற்பதாண்டுகளுக்கு முந்தைய ரவி சட்டென்று நிமிர்ந்தான். என்ன சொன்னே என்று கேட்டபடி வாய்விட்டு அழஆரம்பித்தான்.
                        அவனின் அழுகை நேரு அனாதை இல்லமெங்கும் பரவி அப்படியே ஆகாயம் நோக்கி நீண்டது.