Sunday 29 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 22

Rate this posting:
{[['']]}
விசாரணை

உயரமாய் நின்றிருந்த மரத்தேரின் சக்கரங்கள் இறந்தகாலத்தில் உறைந்திருந்தன. சூரியன் நடுவானில் சுட்டெரிக்க தேரின் நிழல் அகலமான அதன் அடிபாகத்தின் கீழ் ஒளிந்து கிடந்தது. அருகே வேய்ந்திருந்த ஓலைக்கொட்டகையின் கீழ் ஒதுங்கி சிகரெட்டைப் பற்ற வைத்தேன். மட்டரக சிகரெட்டின் காட்டமான புகையில் உடல் சற்றே தளர்ந்து ஆசுவாசமானது. வாழ்வில் எத்தனை சங்கதிகள் வந்தாலும் புகையும் சுயசம்போகமும் தரும் சுகமே அலாதிதான். புகைத்துக்கொண்டே வசூலுக்குப் போக வேண்டிய கடைகளை மனதுக்குள் பட்டியலிட்டேன். முதலில் மகால் பக்கமாக இருக்கும் கடைகளுக்குப் போகலாம் என்று முடிவு செய்து சிகரெட்டை வீசிவிட்டு நடக்கத் தொடங்கினேன்.

விளக்குத்தூணைக் கடந்து கல்லுச்சந்துக்குள் நுழைந்தபோதுதான் சாலையில் ஓரமாகக் கிடந்த மனிதரைப் பார்த்தேன். தகதகக்கும் தார்ச்சாலையின் வெப்பத்தில் குண்டிச்சூடு உணராமல் அலங்கோலமாகக் கிடந்தவரை என்னால் அடையாளம் காண முடிந்தது. கூலிக்கு மூட்டை தூக்கும் மாரிச்சாமி அண்ணன். நான்கைந்து நாட்களாக கடைப்பக்கமே வரக்காணோம் என்று யோசித்துக் கொண்டிருந்தவரை சாலையில் இந்தக்கோலத்தில் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. குனிந்து அவரை எழுப்ப முயன்றேன். “முடியலை தம்பி.. சரியான தண்ணி.. அவர் இப்படிக் குடிச்சு நான் பார்த்ததேயில்ல.. காலைல இருந்து இங்கனதான் கெடக்காப்டி.. நடுரோட்டுல கெடந்தவர நம்ம பசங்கதான் ஓரமா இழுத்துப் போட்டானுக. இப்போதைக்கு எழுப்ப முடியாது. செரமம்” அருகில் கரும்புஜூஸ் விற்கும் அண்ணாச்சி அலுத்துக்கொண்டார். எதுவும் செய்ய மாட்டாதவனாக அங்கிருந்து நகர்ந்தேன். தொடர்ந்து அடுத்தடுத்த கடைகள் என் நினைவை நிறைக்க மாரியை மறந்து வசூலுக்குள் நுழைந்தேன்.

சாயங்கால வசூலுக்காக வடக்கு மாசி வீதிக்குள் நுழைந்தவன் அதிர்ந்தேன். மாரி இப்போது டெலிபோன் ஆபிசுக்கு அருகிலிருந்த முட்டுச்சந்தில் விழுந்து கிடந்தார். அருகே சென்றால் சூழ்ந்திருந்த மூத்திரவாடையையும் மீறி மதுநாற்றம் குப்பென்று அடித்தது. எழுந்தவர் மறுபடியும் குடித்துவிட்டு இங்கே வந்து மட்டையாகியிருக்க வேண்டும். தலையில் அடித்துக் கொண்டேன். நன்றாகயிருந்த மனிதருக்கு என்ன ஆனது? நாளைப்பின்னே கடைக்கு வரும்போது கண்டபடி சத்தம் போட வேண்டும் என்று யோசித்துக்கொண்டே நகர்ந்தேன்.

லாரிகளுக்கு அனுப்ப வேண்டிய மூட்டைகளையெல்லாம் சிட்டை போட்டு வண்டியேற்றி முடித்தபோது மணி பதினொன்று. ஒரு சிகரெட் புகைத்தால் நலம். மொட்டைகோபுர முனிக்கு எதிர்த்த சந்திலிருக்கும் காபிக்கடைதான் வழக்கமான இடம். ஒரு கையில் டீ கிளாசும் மறுகையில் சிகரெட்டுமாக இருட்டுக்குள் நான் ஒதுங்க அருகிலிருந்த வீட்டின் படிகளில் ஒரு உருவம் அசையாமல் அமர்ந்திருந்தது. நான் உற்றுப்பார்க்க அது மாரி என்று புரிந்தது. என்னை நிமிர்ந்து பார்த்தவர் கண்களைத் தாழ்த்திக்கொண்டார். “தம்பி.. ஒரு சோடா வாங்கிக்கிடவா..” என் பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து கடையினருகே போய் நின்றார். நான் கடைக்காரரிடம் தலையசைத்தேன். கொப்பளித்துப் பொங்கிய சோடாவை ஊற்றி முகத்தைக் கழுவியவர் பிறகு கொஞ்சமாகத் தொண்டையிலும் சரித்துக் கொண்டார். இறுக்கமாயிருந்த அவர் உடல் சற்றே தளர்ந்ததாகத் தோன்றியது.

நான் அவரருகே சென்று பேச முற்பட்டபோது எங்களுக்குப் பின்னாலிருந்து விசில் சத்தம் கிளம்பியது. அந்தக்கணம் மாரியின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னைச் சிதறடித்தன. நாரையின் கால்களாய்ச் சிவந்திருந்த கண்களில் கிலி படர அவரது முகம் விகாரமாக மாறியது. உடல் தடதடுத்து நடுங்க இடுப்பில் கிடந்த கைலியை எடுத்து முகத்தை மூடிக்கொண்டார். நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். காவலர்கள் வழக்கமான இரவுப்பாராவுக்காக மீனாட்சி கோவிலைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நான் மீண்டும் மாரியிடம் திரும்பினேன். ஒளியிலிருந்து விலகி இருட்டுக்குள் நுழைந்தவர் அருகிலிருந்த ஒல்லியான மரத்தின் பின்னால் ஒளிவதாக மறைந்து நின்றார். கிளைகளின் நடுவே முகத்தைப் புதைக்க முயன்றவரின் உடல் அதீதமாக நடுங்குவதை என்னால் இருளிலும் பார்க்க முடிந்தது. மெல்ல அவரை நெருங்கி தோளைத் தொட்டேன். “வேணாம் தம்பி.. போயிரலாம்.. அவனுக நம்மளக் கொன்னுருவானுங்க” எனும் வார்த்தைகளை அவரது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தன. “என்னண்ணே ஆச்சு..” விசில் சத்தம் மெல்லத் தேய்ந்து மறைய மாரி நிமிர்ந்து என் கண்களுக்குள் பார்த்தார்.

மாரிக்கு வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். எளிமையான மனிதர். எப்போதும் சிரித்தபடி தானிருக்கும் இடத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவர். ஒரே ஒரு மகள் மட்டும். மனைவி கிடையாது. வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை பார்ப்பார். மீதி இரண்டு நாட்களும் சினிமா தியேட்டர்களில்தான் கழியும். வேலை நேரங்களில் தான் பார்த்த படங்களை அவர் விவரிப்பதே அத்தனை சுவாரசியமாக இருக்கும். கண்கள் விரிய ஒவ்வொரு காட்சியையும் ரசித்து விளக்கமாகச் சொல்லுவார். வாழ்க்கையின் பாரங்கள் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாத வெள்ளந்தியான மனிதர்.

மாரிச்சாமியின் மகள் ஒரு டெய்லரிங் கடையில் வேலை பார்த்து வந்தாள். திங்கட்கிழமை காலையில் கடைக்குப்போன பெண் அன்றிரவு வீடு திரும்பவில்லை. தினத்தின் வேலையெல்லாம் முடித்து மாரி வீட்டுக்கு வந்தபோது நேரம் பத்து மணியைத் தாண்டியிருந்தது. எப்போதும் சுடுசோறுடன் தனக்காகக் காத்திருக்கும் மகள் வீட்டில் இல்லை என்பது அவரை சங்கடப்படுத்தியது. அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரித்தபோது சாயங்காலத்தில் இருந்தே மகள் வீட்டுக்கு வரவில்லை என்பது அவருக்கு புரிபட்டது. ஒருவேளை அவனியாபுரத்தில் இருக்கும் அத்தை வீட்டுக்குப் போயிருப்பாளோ? அவசர அவசரமாக செல்போனில் அழைத்தார். அங்கும் அவள் வரவில்லை என்றே பதில் வந்தது. அந்த ராத்திரி முழுதும் மகளை எதிர்பார்த்து அவர் வீட்டுவாசலில் தூங்காமல் உட்கார்ந்திருந்தார்.

விடிந்தவுடன் தனக்குத் தெரிந்த இடங்களில் எல்லாம் தேடியும் மகள் கிடைக்கவில்லை. வேலை பார்க்கும் இடத்துக்கும் போகவில்லை. அவளுடைய செல்போனும் அணைந்து கிடந்தது. பயம் மெல்ல மெல்ல புகைமண்டலமாய் மாரிச்சாமியின் மனதைச் சூழ்ந்தது. வாணி ரொம்பவும் நல்ல பெண். அவரறிந்து அவள் எந்தத் தவறும் செய்யக்கூடியவளில்லை. மாரிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இறந்து போன மனைவி கண்முன்னே வந்து போனாள். வேறு வழியின்றி போலிசில் சென்று கம்ப்ளெய்ண்ட் கொடுக்கலாம் என்ற முடிவுடன் கிளம்பினார்.

சுப்பிரமண்யபுரம் போலிஸ் ஸ்டேசன் அமைதியாக இருந்தது. கட்டிடத்தின் சிவப்புநிறக் கற்களைப் போலவே இறுக்கிடந்த மனிதர்களின் மத்தியில் நுழைவது மாரிக்கு என்னவோ போலிருந்தது. மேசைக்குப் பின்னால் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவரிடம் சென்று தன் மகள் காணாமல் போன விசயத்தைச் சொன்னார். நிமிர்ந்து பார்த்த எழுத்தர் இன்ஸ்பெக்டர் ராத்திரிதான் வருவாரென்றும் அப்போது வந்து கம்ப்ளெய்ண்ட் கொடுக்கும்படியும் கரகரப்பான குரலில் சொன்னார். மீண்டும் ஒருமுறை அந்தக் கட்டிடத்துக்குள் நுழைவதென்பதே மாரிக்குள் பீதியை உண்டாக்கியது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களின் பெரும்பகுதியைத் தான் அங்குதான் கழிக்கப்போகிறோம் என்பதை அவர் அறிந்திருக்குவில்லை.

வீட்டுக்குப் போக பிரியமில்லாமல் மாரி எதிரேயிருந்த சைக்கிள் ஷெட்டில் போய் அமர்ந்தார். திருட்டு வாகனங்கள் சிதைவுற்று அங்கங்கே சரிந்து கிடந்தன.  இருள் சூழும் நேரத்தில் வானம் தெளிவில்லாமல் இருந்தது. முந்தைய இரவு தூக்கமில்லாமல் உடலாலும் மனதாலும் சோர்வாயுணர்ந்தார். நம்பிக்கையை அவர் முற்றாய் இழக்கவிருந்த தருணத்தில் மிகுந்த சத்தத்தோடு இன்ஸ்பெக்டரின் வாகனம் வளாகத்துக்குள் நுழைந்தது. உள்ளே போனவர் வெளியேறி வருவதற்காக வாசலில் போய் நின்று கொண்டார். சிறிது நேரம் கழித்து வெளியேறி வந்த இன்ஸ்பெக்டர் நின்றிருந்தவரைப் பார்க்காதது போல வேகவேகமாக நடந்தார். மாரி அவர் பின்னால் ஓடினார். “என்னய்யா..” சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தவரின் கண்களில் எகத்தாளம். தன் மகள் காணாமல் போனதை விளக்கமாகச் சொல்ல உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்தோடு இன்ஸ்பெக்டர் கேட்டுக்கொண்டார். “இப்போ ரவுண்ட்ஸ் போறேன்.. கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். எழுதிக் குடுத்துட்டுப் போ. அப்படியே உன்னோட போன் நம்பரையும் சொல்லிரு. பாக்கலாம்..” கிளம்பிப் போனார்.

அன்றிரவும் மாரியால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அரைகுறை தூக்கத்தில் அவருக்கோர் கனவு வந்தது. ஒரு மலைப்பிரதேசத்தின் உச்சியில் மகள் நின்றிருப்பதைப் பார்த்தார். மேகங்கள் அவள் முகத்தை உரச கண்களில் தேங்கியிருப்பது கண்ணீரா அல்லது பனித்துளிகளா என்பது புலப்படவில்லை. சற்றே தொலைவில் நின்று அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். மகள் அவரைப் பார்த்து கைகளை அசைக்கிறாள். அவளது உடல் மெல்ல நகர்ந்து பள்ளத்தை நோக்கி வீழ்கிறது. மாரி கத்த முற்படுகிறார். ஆனால் முடியவில்லை. உதடுகள் மௌனமாய் வெறுமனே அசைகின்றன. சிலையாய் மாறிப்போன மனிதனைப்போல் அவரால் அங்கிருந்து நகரமுடியவில்லை. அவளது உடல் காற்றில் சிறகாக மெல்ல ஆடிக்கொண்டே கீழே போகிறது. சட்டென்று விழிப்பு தட்ட மனிதன் எழுந்து கொண்டார். முகம் வியர்வையில் குளித்து உடல் நடுங்கியது. இது உண்மையாயிருக்காது. என் மகள் எப்படியும் திரும்பி வருவாள் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு படுத்தார்.

மறுநாள் காலை பத்து மணிக்கு ஸ்டேசனுக்கு வரும்படி மாரிக்கு போன் வந்தது. இப்போது காவல் நிலையத்தில் வேறொரு அதிகாரி இருந்தார். தன் முன்னால் வந்து நின்ற மாரியைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர் கேட்டார். “சொல்லுய்யா.. எதுக்கு ஒம்மவள கொலை பண்ண? அவள எங்க பொதச்சு வச்சிருக்க?”

மின்சாரம் பாய்ந்ததாக மாரி அதிர்ந்தார். “அய்யா.. என்ன சொல்றீங்க.. எம்மவள நான் எதுக்குக் கொல்லப்போறேன்..” வார்த்தைகள் குழற அவரால் கோர்வையாகப் பேச முடியவில்லை.

எதிரே நின்றிருந்த அதிகாரியின் முகம் சற்றும் மாறவில்லை. அதே சிரிப்போடு மீண்டும் சொன்னார். “உங்களப் பத்தித் தெரியாதாடா? பொண்ணு எவனோடயாவது ஓடியிருப்பா. ஒங்களுக்கு சாதி முக்கியமாப் பட்டிருக்கும். அவளக் கொன்னிருப்ப. அதான் கேக்க யாருமில்லாத அனாதைங்கதான... சொல்லு. மவள மட்டும்தான் கொன்னியா இல்ல அவ கூட இருந்தவனையுமா? ஒருவேள ரெண்டு பேரும் படுத்துக் கெடந்தப்ப பார்த்தியா.. எங்க பொதச்ச.. நீயா சொல்லிரு பாப்பம்..” பேசும்போது வார்த்தைகளில் இருந்த மரியாதை குறைவதை மாரியால் உணர முடிந்தது.

“நான் எதுக்குய்யா..” வார்த்தைகளை முடிக்குமுன்பாகவே அதிகாரியின் கைகள் அவர் மேல் விசையுடன் இறங்கின. “தாயளி.. ஒங்கள மாதிரி எத்தன பேரைப் பார்த்திருப்பேன்.. ஓரமாப் போய் ஒக்காருடா.. ஒன்னய எப்படி உண்மையச் சொல்ல வைக்கணும்னு எனக்குத் தெரியும்..” பெருமூச்சு வாங்கப் பேசி முடித்தவர் அங்கிருந்து அகன்றார். அழுதபடியே மாரி அருகிலிருந்த பெஞ்சில் சென்று உட்கார்ந்தார். நேற்று தான் சந்தித்த இன்ஸ்பெக்டர் வந்தால் ஒருவேளை தான் சொல்வதை நம்பக்கூடும் என்கிற சிறு நம்பிக்கை மட்டுமே அவரிடம் மீதமிருந்தது. மகள் தொலைந்ததையும் மீறி அவர்கள் தன் மீது சொல்லும் குற்றம் பெரும்பாறையென அவர்மீது கவிழ்ந்திருந்தது.

மாலையில் திரும்பி வந்த இன்ஸ்பெக்டரிடம் தன் வீங்கிய முகத்தைக் காட்டி புலம்பினார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அந்த அதிகாரி கான்ஸ்டபிளை அழைத்து மாரியின் வீட்டைப் போய் பார்த்து வரச் சொன்னார். எதற்கெனத் தெரியாவிட்டாலும் அதிகாரியின் வார்த்தைகளுக்காக இருவரும் வீட்டை நோக்கிக் கிளம்பினார்கள்.

மெஜூரா காலேஜ் பாலத்தின் கீழ் ரயிலடியோரமாய் இருந்தது மாரியின் வீடு. கிட்டத்தட்ட குடிசை. ஒரே ஒரு அறைதான். இடதுபக்கம் துணி கட்டி மறைவாயிருந்த பகுதிதான் குளியலறையாய் இருக்க வேண்டும். வாணியின் கிழிந்த புடவை குளியலறையை மறைக்கும் திரைச்சீலையாய்த் தொங்குவதை  கான்ஸ்டபிள் தன் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். “ஏய்யா.. இங்கதா குளியல்னா வெளிக்கி இருக்க எங்க போவீங்க..” ரயிலோரப் புதர்களைச் சுட்டி மாரியின் விரல்கள் நீண்டன. அடுப்படியில் ஒரு மஞ்சப்பைக்குள் பாட்டில்கள் கிடைத்தன. அவற்றை கவனமாக எடுத்துக் கொண்டார் கான்ஸ்டபிள். வீட்டின் உள்ளேயிருந்த சில சொற்பப் பாத்திரங்களைத் தவிர்த்து அங்கங்கே சில புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. அத்தனையும் சினிமா பற்றிய பத்திரிக்கைகள். அவற்றையும் எடுத்து ஒரு பையில் பத்திரப்படுத்தினார். பிறகு மெல்ல மாரியை நெருங்கி கிசுகிசுப்பான குரலில் சொன்னார். “புரியாத ஆளா இருக்கியேய்யா.. காலைல வந்த ஆபிசர் தானா உன்ன அடிச்சதாவா நினைக்குற? எல்லாம் நம்ம அய்யா சொல்லித்தான்யா. நீதான் தப்பு பண்ணின்னு எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு. ஒனக்கு ஒரு நாள் டைம். ராத்திரி பூரா இங்கனயே உக்கார்ந்து யோசி. உண்மைய ஒத்துக்க. அதுதான் உனக்கு நல்லது. தப்பி ஓடலாம்னு மட்டும் நினைக்காதே.. ஈசியா புடிச்சுருவோம்..” மனம் மொத்தமாக இடிந்து போக அப்படியே தரையில் உட்கார்ந்து அழத் தொடங்கினார் மாரி.

மறுநாள் காலை. போலிஸ் ஸ்டேசனில் அனைவரும் கூடியிருந்தார்கள். மாரி கைகளைக் கட்டி கூனிக்குறுகி அவர்களினடுவே நின்றிருந்தார். மேசையில் அவருடைய சாமான்கள் பரத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர் வீட்டின் புகைப்படங்கள், பாட்டில்கள், அவரிடமிருந்து பிடுங்கிய செல்போன் மற்றும் புத்தகங்கள். நடுநிலையாய் நின்றிருந்த போலிஸ் பேசத் துவங்கியது. “உன் வீட்டுல கிடச்ச புத்தகங்களப் பார்த்தியா? எல்லாத்துலயும் நடுப்பக்கத்துல எவளோ ஒருத்தி அவுத்துப்போட்டு நிக்குறா. உன் செல்போனுல பூரா நடிகைங்க படம். கூலிக்கு சுமை தூக்குறவனுக்கு அப்படி என்னடா வெல அதிகமான செல்போன்? பிட்டுப்படம் பாக்கவா? என்ன நடந்ததுன்னு நான் தெளிவாச் சொல்றேன் கேட்டுக்க.. உம்பொண்டாட்டி செத்து பல வருசம் ஆச்சு. ஆச்சா.. ஒனக்கோ உடம்பு பொம்பள தேடிருக்கு. அதுக்குத்தான் அப்பப்ப இந்த சினிமா புத்தகம் எல்லாம். வீட்டுலயே வளர்ந்த பொண்ணு இருக்கா. அவ குளிக்கும்போது பாக்குறதுக்கு வசதியாத்தான் கிழிஞ்ச சேலையக் கட்டி விட்டுருக்க.. இல்லையா? சரக்குப் பழக்கம் வேற.. அது உள்ள போனாத்தான் மனுச மக்க வித்தியாசம் தெரியாதே? ரொம்ப நாளா மக மேல உனக்குக் கண்ணு. நாள் பார்த்து அவளை ஏதோ செஞ்சிருக்க… தாங்க மாட்டாம அவ செத்துப் போயிட்டா. எங்கயோ அவள மறைச்சு வச்சுட்டு நம்ம மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு நீயா நல்ல புள்ள மாதிரி எங்ககிட்ட வந்து கம்ப்ளெயிண்ட கொடுக்குற. ஏண்டா மயிரு.. எங்களையெல்லாம் பார்த்தா உனக்குக் கேனப்பொச்சாட்டம் தெரியுதா?” அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தார் மாரி. “ஒழுங்கா உண்மையா ஒத்துக்கிட்டு இடத்தைக் காமிச்சின்னா மணம்பெத்து போவ.. இல்ல மவனே அடிச்சே கொன்னுருவேன்..” அதிகாரி மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். மாரியின் பொருட்களை ஒரு பாலிதீன் பைக்குள் போட்டுக் கட்டிய கான்ஸ்டபிள் அதை பத்திரமாக மேசையில் கொண்டு வைத்தார். அவரவர் வேலையைப் பார்க்க நகர்ந்து போக பேச வாய் வராதவராக பிரம்மை பிடித்தவரைப்போல மாரி ஓரமாகச் சென்று தரையில் அமர்ந்தார்.

எத்தனை நேரம் கழிந்ததென்று தெரியவில்லை. திடீரென்று செல்போன் அலறியது. மாரி துடித்துத் தவ்வியெழுந்தார். அந்த இசை வாணிக்காக அவர் பிரத்தியேகமாகப் பயன்படுத்தும் இசை. பாலிதீன் பைக்குள் அவருடைய செல்போன் நடுங்கிக் கொண்டிருந்தது. யார் அழைப்பதென்று எடுத்துப் பார்த்தார் கான்ஸ்டபிள். வாணி என்றிருந்தது. “ஹலோ… என்னம்மா.. அப்படியா.. நீ இப்போ எங்க இருக்க.. சரி சரி.. உங்கப்பாக்கிட்ட பேசு..”

நடுங்கும் கைகளால் செல்போனை வாங்கினார். “ம்மா.. வாணி..” அவர் குரல் தழுதழுத்தது. மகள் இன்னும் உயிரோடுதானிருக்கிறாள். கிணற்றிலிருந்து ஒலிப்பதாக மற்றவளின் குரல் கேட்டது. தான் ஒரு பையனை விரும்பியதாகவும் அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார் என்கிற பயத்தில் அத்தை வீட்டுக்கு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும் சொன்னாள். “நான் அவனியாபுரத்துக்கு போன் பண்ணிக் கேட்டேனேம்மா.. அப்பவாவது சொல்லிருக்கலாம்ல..” மறுமுனை அமைதியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள். “மன்னிச்சுருங்கப்பா..”

நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த போலிஸ்காரர்களின் முகத்தில் எந்த மாற்றமுமில்லை. தங்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத நாடகமொன்றின் பார்வையாளர்களைப்போல வெறுமனே நின்றிருந்தார்கள். மாரி அழுதுகொண்டே செல்போனை கான்ஸ்டபிளிடம் கொடுத்தார். “எம்மவ பத்திரமா இருக்காய்யா.. எனக்கு அது போதும்..”. போலிஸ்காரர் பதிலுக்குச் சொன்னார். “நாந்தா மொதல்லயே சொன்னேனேய்யா.. ஏதாவது லவ் மேட்டராத்தான் இருக்கும்னு.. போ.. உன்னோட சாமானை எல்லாம் எடுத்துக்கிட்டு கெளம்பு.. இனியாவது பொண்ண பத்திரமாப் பார்த்துக்க..” மாரி நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தார். முதல்நாள் பார்த்த புன்னகை அதில் இன்னும் உறைந்திருந்தது.

தடுமாறி நடந்த மனிதன் வீட்டுக்கு வந்தபோது வாணியும் அங்கே வந்திருந்தாள். கல்யாணக்கோலம். உடன் மாப்பிளையும் வந்திருந்தான். வேகவேகமாக ஓடி வந்து காலில் விழுந்தவளைத் தொட்டுத் தூக்கியவர் சட்டென்று உதறித் தள்ளினார். அவளைப் பார்க்காதபடி பின்பக்கம் திரும்பி நின்று கொண்டார். என்னவென்று புரியாமல் அவள் அப்பா என்றழைத்தாள். “வேணாம்.. அப்படிக் கூப்பிடாத.. எங்கேயாவது போயிரு.. நல்லாயிரு.. ஆனா என்கிட்ட வராதே..” விம்மலும் அழுகையுமாக நடுங்கும் குரலில் கத்தினார். அவள் வெளியேறிச் சென்ற பிறகும் வெகு நேரம் அவருடைய அலறல் அந்த வீட்டுக்குள் கேட்டுக் கொண்டேயிருந்தது.

நிலா வெளிச்சத்தில் நான் மாரியின் முகத்தைப் பார்த்தேன். மிருகத்தின் வன்மம் அந்தக் கண்களில். சட்டென்று கண்ணீர் பெருக்கெடுக்க அந்தக்கண்கள் குளமாயின. வன்மம் மறைந்து இப்போது அங்கே கழிவிரக்கம் மட்டுமே மிச்சமிருந்தது. “அந்தத் தேவுடியா பசங்க பேசுன பேச்சையெல்லாம் கேட்டபொறவு என்னால எம்மகள மகளா மட்டும் பாக்கவே முடியலடா தம்பி..” முகத்திலறைந்து கொண்டு அழ ஆரம்பித்தார். ஏதும் பேசாமல் வெறுமனே அவரைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.