Sunday 22 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 17

Rate this posting:
{[['']]}

அப்பாக்கள் இருவர்

வவனியாவிற்கு இங்காலை புகையிரதத் தண்டவாளங்களை இயக்கங்கள் எல்லாம் புரட்டிப் போட்டிருந்த காலம். வடபகுதிப் பிரயாணிகள் தலைநகர் கொழும்பிற்குப் போவதென்றால், முதலில் வவனியா சென்று அங்கிருந்து புகையிரதம் மூலமாகவோ அல்லது பஸ் மூலமாகவோ போக வேண்டும். பஸ் பிரயாணம் ஆபத்தானது. சிங்களக் காடையர்கள் பஸ்சை இடையிலை மறிச்சு தமிழ் மக்களைத் தொந்தரவு செய்வார்கள். இளைஞர்களைக் கதறக் கதற இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.

நாங்கள் வவனியா புகையிரத நிலையத்திற்கு ஒரு மணியளவில் போய் விட்டோம். ஒரே சனக்கூட்டம். ஒன்றரை மணிக்குத்தான் கொழும்புக்குப் போகும் புகையிரதம் வரும்..

“நான் ‘பாக்’ ஒண்டை கோணர்சீற்றுக்கு எறியிறன். நீ அப்பாவைக் கூட்டிக்கொண்டு கெதியிலை ஏறு. என்னைப் பாக்க வேண்டாம். நான் எப்பிடியோ ஏறிவிடுவன்” தம்பியைப் பார்த்துச் சொன்னேன்.

பெரும் பாய்ச்சலுடன் புகையிரதம் ஸ்ரேசனிற்குள் நுழைந்தது.
மனதில் பரபரப்பு. நெரிசலில் கை வேறு கால் வேறாக எங்கோ தனித்தனியே இருக்க, புகைவண்டி ஒரு குலுக்கலுடன் நின்றது. பாக் ஒன்றை கோணர்சீற்றில் வைத்துவிட்டு, எதைப்பிடிக்கிறோம் யாரைப் பிடிக்கின்றோம் என்பதுகூடத் தெரியாமல் தெப்பக்குளத்திருவிழாவில் தேர் மிதந்து போவதுபோல உடல் நகர, புகையிரதத்துடன் இழுபட்டுக் கொண்டே போகின்றேன்.

“அக்கா… நாங்கள் வந்திட்டோம். நீங்கள் கெதியிலை ஏறுங்கோ…” இழைக்க இழைக்கச் சொல்லியபடியே கோணர்சீற்றடிக்கு தம்பி வந்துவிட்டான். அப்பாவிற்கு இருக்க ஒரு இடம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நின்றுகொண்டு பிரயாணம் செய்யமாட்டார். இருந்து போவதும் சிரமம் தான். அப்பாவின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகிப் போய்விட்டன. அவருக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டும்.

“பிள்ளை அஞ்சலை கெதியிலை ஏறு. கவனம்!” அப்பா ஏக்கத்துடன் என்னைப் பார்த்தார். சோர்வுடன் அவர் முகம் களையிழந்து காணப்பட்டது. புகையிரதம் புறப்படத் தொடங்கியது.

புகையிரத்துடன் சிறிதுதூரம் ஓடினேன். வாசலில் தொங்கியபடியே மனிதக்கூட்டம் நசுங்கிப் போயிருந்தது. ஒருமாதிரி இரண்டு மூன்று கொம்பாற்மென்ஸ் தள்ளி ஏறிக் கொண்டேன். பள்ளியில் படித்திருந்த நடனம் கைகொடுக்க ஒரு அலாரிப்புடன் புகையிரதத்தினுள் குதித்தேன்.
அப்பா தம்பியைத் தவற விட்டேன். அடுத்தடுத்த ஸ்ரேசனில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்புடன் சன நெரிசலை ஊடறுத்து மெது மெதுவாக முன்னேறினேன். மனித அம்மிகள் அரைத்த மாசிச் சம்பலில் என் செருப்புகள் அறுந்து தொங்கின. உடம்பு கசங்கி உடுப்பிற்கு உலை வைத்தது. வென்ரிலேசன் ‘வி’ கட் வகிடெடுத்து வண்டவாளமாகியது. யாரையும் நொந்து கொள்ள முடியாது. நிலமை அப்படி.

அப்பா பாவம். எத்தனை வருடங்களாக இப்படி கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் என்று வேலைக்காக அலைகின்றார். அப்போது எனக்கு இந்த யோசனை வரவில்லை. முதல் பிரயாணமே எனக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தது.

அப்பாவின் குடும்பம் பெரிது. வீட்டிற்கு மூத்தவர். தனது பதினெட்டு வயதில் கொழும்பிற்கு வேலைக்குப் போய்விட்டதாகச் சொல்லுவார். இப்போது வயது அறுபதைத் தாண்டிவிட்டது. அப்பா தனது குடும்பதிற்கும் கஸ்டப்பட்டு, இப்போது எமது குடும்பதிற்கும் கஸ்டப்படுகின்றார். அம்மா ஐம்பது வயதிற்குள் காலமாகிவிட்டார். அதன்பின்னர் அம்மாவும் அவர்தான். நாங்கள் பாட்டியுடன்---அப்பாவின் அம்மாவுடன்---ஊரில் வாழ்கின்றோம். எங்களுடைய மாமாவும்---அம்மாவின் தம்பி---அருகில்தான் இருக்கின்றார். அவரும் எங்களுக்கு உதவி செய்வார். அப்பா இரண்டு மூன்று மாதங்களுக்கொரு தடவை கொழும்பில் இருந்து வீட்டிற்கு வந்து போவார்.

வீட்டை விட்டுப் புறப்படும்போது நடந்தவை காட்சி ஒன்று, காட்சி இரண்டு என நாடகக்காட்சிகளாக விரிந்தன.

|வவனியாவுக்கு அங்காலை நெற்றிபோட்டை அழிச்சுப் போடுங்கோ. தமிழிலை கனக்கக் கதையாதையுங்கோ… சிங்களவன் வெட்டுவான்… கொத்துவான்…| இது மாமா.

|பிள்ளை அஞ்சலை… போனவுடனை கடதாசி போட்டுவிடு. உவன் பாவம், வருத்தத்தோடை ஒண்டும் செய்யமாட்டான். எடே பெடியா கொக்கா பத்திரமடா. கிணத்துத் தவளை அவள்.| என்ற பாட்டி முனகிக் கொண்டார். பத்திரம் ஸ்டேசனிலேயே பறந்தது பாட்டிக்கு எப்படித் தெரியும்?

சின்னப்பிள்ளையிலை---விரல் சூப்பும் பருவத்திலே எல்லாவற்றிலும் கெட்டித்தனம். ‘உம்மாக்’ குடுத்து ஜோராகக் கைதட்டு; பள்ளிக்குக்குப் போகத் தொடங்கியதும், அஞ்சலையின் குரல் கணீர் எண்டிருக்கு என்றார்கள். பேச்சு, பண்ணிசை, நடனம், விளையாட்டு எல்லாவற்றிலும் முதலிடம். பாராட்டுகள், பரிசுகள், கேடயங்கள்; தாவணி போட்டதும், தெரியாத்தனமாக கால் மேல் கால் போட்டு சிறிது ஆட்டிவிட்டால் அப்பாவுக்குக் கோபம் வந்துவிடும். என்னைப்பற்றியே கனவு கண்டு, பெரிய எதிர்பார்ப்புகளுடன் அப்பா இருந்தார். என்னை சங்கீதம் படிக்க அனுப்பினார், நடனம் படிக்க வசதி செய்து கொடுத்தார். அம்மா இருந்திருந்தால் எதைச் செய்து தந்திருப்பாரோ அத்தனையும் செய்து தந்தார். சிறுவயதில் இருந்த கலகலப்பு, பருவம் போகும் பாதையிலே அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு என்ற பகடைக்காய்களுக்கு பலியாகியது.

திடீரென என்னைச்சுற்றி ஒரு வேகம் எழுந்து படர்வதை உணர்ந்தேன். போர்க்காலப்படைகள் வியூகம் வகுத்து நின்றன. முன்னாலே ஒருவன் முள்ளம்பண்டித் தலைவிரித்து ஆடினான். பின்னாலே ஒரு ஆஜானுபாகு பல்லிளித்துச் சிரித்தான். வாழ்க்கையில் கிடைக்காதவற்றை இந்தப் புகையிரதத்திற்குள் அனுபவித்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவர்களுக்கு.

“தம்பி… பெம்பிளைப்பிள்ளைக்கு எழும்பி இடம் விட்டுக் குடுக்கவேணும்” கிழவி ஒருத்தி இராகம் பாடினாள்.

“ஆச்சி! தங்கைச்சிக்கு இடம் குடுக்கிறதிலை பிரச்சினை இல்லை. பிறகு இந்தச் சன நெரிசலுக்கை நான் எங்கை போறது? எழும்பி பக்கத்திலைதான் நிக்க வேணும். பக்கத்திலை நிண்டா என்ன சொல்லுவியள்? தடிமாடு பார் குமர்ப்பிள்ளைக்கு சேர்கஸ் காட்ட பக்கத்திலை நிக்கிறான் எண்டு சொல்லுவியள்” பொருமினான் அந்த இளைஞன். பின்னர் என்ன நினைத்தானோ தெரியவில்லை, இருக்கையை எனக்குத் தந்துவிட்டு சனநெரிசலினூடு புகுந்து எங்கோ போய்விட்டான்.

மார்கழிக் குளிர் மாய்ந்து மாய்ந்து புகையிரதத்தினுள் அடித்தது. காற்று குபுக்கென்று உள்ளே போக சுவாசப்பைகள் திணறின.

“ஏய் மச்சான்… இஞ்சை பாரடா! வரலாறு காணாத கொள்ளை அழகு ஒண்டு, அந்தக்காலத்து குஸ்பு மாதிரி” இரண்டுபேர்கள் புகையிரதத்தினுள் இடித்து இடித்து முன்னேறிக் கொண்டிருந்தவர்கள் என்னைக் கண்டதும் பக்கத்திலே நின்றுகொண்டார்கள். சொன்ன கிறுக்கனின் சென்ற் சுகந்தம் வீசியது. மற்ற பேரழகன் பல்லைக் காட்டினான். “உயிருள்ள சித்திரம்” முதலாவது அம்பாக என் காதிற்குள் விழுந்தது. அப்பா இருந்திருந்தால் பேரழகனின் பற்கள் உள்ளே போயிருக்கும். கண்களை மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்தேன். அவன் கண்களை யாரால் கட்ட முடியும்? ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்று பிடிவாதம் கொள்கின்றான்.

புகையிரதம் குலுங்கும்போது, அவன் பாதம் மெதுவாக ஸ்பரிசித்து விலகியது. புகையிரதம்தான் இந்த வித்தையைச் செய்கின்றது, தனக்கு ஒன்றுமே தெரியாதாம் என்ற பாவனையில் அவன். பல்லிழித்து பலனில்லாது போக பாதங்களைச் சுரண்டி பல்லாங்குழி விளையாடுகின்றான். சுரண்டிப் பார்த்தால் விழுந்துவிட நான் என்ன சுவீப் ரிக்கற்றா? தன்னுடைய ஆளுகைக்குள் என்னைக் கொண்டுவர வசியங்கள் செய்கின்றான். நசுங்கிக் கொண்டிருக்க ஒரு கூட்டம், நசுக்க மறு கூட்டம்.

அனுராதபுரம் கழிய சனம் குறைஞ்சிடும். பிறகு இடமெல்லாம் வெறிச்சோடிப் போகும். அப்ப அப்பா தம்பியுடன் இருக்கலாம் – எனக்கு நானே சமாதானம் சொன்னேன்.

புகைவண்டிக் குலுக்கலில் வயிறு குமட்டியது. கொஞ்சநேரம் குட்டிதூக்கம் போட்டால் சரிவந்துவிடும்.

சட்டென யாரோ இடிப்பது போல இருக்க விழித்துக் கொண்டேன். இது என்ன புதுக்கூத்தாக இருக்கிறது? ஒரு வயது முதிர்ந்தவர், அந்த இரண்டு ஆண்மகன்களையும் தள்ளிக்கொண்டு, என்னோடு உரசி நிற்கின்றார்.

-ஒரு ஐம்பத்தைந்து வயது இருக்குமா?

அகன்ற நெற்றி, வயதில் விழுந்த வழுக்கை, தொந்தி வயிறு. தோப்பிளாஸ் சட்டை. காது கண் மடல்களிலிருந்து நெல்லுநாற்றுகள் போல புசுபுசுவென்று வளர்ந்த மயிர்க்கற்றை. கையில் உழைத்துப் பழுப்பேறிய தோல்பை, ஒரு புத்தகம். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தபடி நின்றார்.

அவருக்கு எனது இடத்தைக் கொடுத்தால், இவங்களுக்கு என்னை இடிக்க இன்னும் வசதியாகப் போய்விடும்.

மெதுவாக புன்னகையை வரவழைத்துக் கொண்டார். ஆங்கிலத்தில் ஏதோ தட்டித் தடவிக் கேட்டார். எனக்குக் கேள்வி புரியவில்லை. தலையை அங்கும் இங்கும் ஆட்டினேன்.

இளந்தாரிகள் என்றில்லாமல் இந்தக் கிழடுகளுமா? மனம் கேள்வி எழுப்பியது. சீ! ஏன் இப்படி தப்பான எண்ணம் கொள்கின்றாய் என்றது திரும்பவும் மனம்.

இப்பொழுது வீட்டில் பாட்டி என்ன செய்வார்? மிச்சம் மீதமிருக்கின்ற உணவை முற்றத்திலே எங்கள்வீட்டு நாயிற்கு வைப்பார். அடுத்தவீட்டு நாய் விரைந்து வரும். இரண்டும் ஒன்றையின்று பார்த்து முழுசும், குரைக்கும், சண்டையும் நடக்கலாம்.

இங்கே எனக்குப் பக்கத்திலும் அந்தக் காட்சிதான் நடந்து கொண்டிருக்கின்றது. முறையே முழுசல், உறுமல். இனிச் சண்டையும் நடக்கலாம்.

இரண்டுநாய்களும் போட்ட சண்டையில் முதியவரின் முழங்கால் துருத்தி என்னை நெரித்தது. நெருஞ்சி முள் குத்தினால் போல. அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, அவருக்கு ஒரு ஸ்குறூ முறுக்கு கொடுத்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல இருந்தேன். ‘ஊ’ என்று முனகிவிட்டு விறைப்பாக அந்த ‘ரெண்டும் கெட்டானைப்’ பார்த்தார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. கத்திச் சத்தம் போட்டு முறையிடுவதை விட, எதிர்த்துப் போராடுவதே மேல்.

நீண்ட நேரம் மெளனம் நிலவியது. அந்த வயது முதிர்ந்தவர் நெடுநேரமாக என்னருகே நின்றார்.

என் தலைக்கு மேல் ஏதோ ஒன்று விழுந்தது. எதிர்பாராமல் இது நடந்ததால் நான் நிலைகுலைந்து போனேன். ஜெண்டில்மன் தூங்கி வழிந்து கொண்டிருந்தர். கை நழுவித்தான் புத்தகம் விழுந்ததா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ‘சொறி’ என்று சொல்லிவிட்டு, என் தோளைத் தொட்டு அணைத்தபடி, குனிந்து கீழே புத்தகத்தை எடுத்தார். முதுகுப்புறம் தட்டித் தந்தார். எனக்குக் கோபம் வந்தது. கத்தவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தத்தளித்தேன். அக்கினி உடம்பெங்கும் பரவியது. எனது  காலை மெதுவாகத் தூக்கி, பலத்தை ஒன்றுதிரட்டி அவர் பாதங்களில் ஓங்கி ஒரு உலக்கைக்குத்து.

அதற்கும் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு நின்றது சடம்.

நெருப்பு எரிமலையாகியது. ’ஐயோ’ என்று கத்திவிட்டேன்.

போட்ட சத்தத்தில் அருகில் இருந்தவர்கள் திகைத்துப் போனார்கள். முதலில் காத்திருந்தவன் போல இளைஞன் ஒரு குத்துவிட்டான். அதன் பின்னர் சரமாரியாகத் தர்ம அடிகள் விழுந்தன. அவர் ஏதோ “றைவர்… றைவர்..” என்று சொல்ல முற்பட்டார். பலனில்லாது போக கூட்டத்தினுள் இருந்து விலகி நழுவி போகத் தொடங்கினார். பின்னாலே சிலர் அவரைத் தள்ளிக் கொண்டு போனார்கள்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சங்கடமாகிப் போய்விட்டது. பாக்கைத் தூக்கிக் கொண்டு, அப்பா தம்பி இருக்கும் இடம் போகலாம் என நினைத்தேன். ஆனால் இந்த நெரிசலிற்குள் எப்படிப் போவது? நான் இங்கேயே இருந்து உறங்கிக் கொண்டேன்.

“இதென்ன அக்கா நல்லா நித்திரை கொள்ளுறா போலக் கிடக்கு. கொழும்பும் வந்திட்டுது!” தம்பி சொல்லியபடியே என்னைத் தட்டி எழுப்பினான். அவனின் கால்மாட்டில் நாங்கள் கொண்டு வந்த பாக்குகள் இருந்தன. கொம்பாற்மென்றில் கால்வாசி வெறிச்சோடிப் போயிருந்தது.

“எங்கை அஞ்சலைக்கு அனுப்பின செக்கியூரிட்டியைக் காணேல்லை? உப்பாலி சும்மா ஒரு இடத்திலை நிக்க மாட்டான்” அப்பாவின் குரல் கேட்டு திடுக்கிட்டேன்.

“என்ன அப்பா சொல்லுறியள்?”

“ரெயினுக்கை என்ரை றைவர் உபாலியைச் சந்திச்சன். அவர் புவே பக்கம் வந்து கொண்டிருந்தார். போறதுதான் போறியள் என்ரை மகள் உங்காலை இருக்கிறாள் ஒருக்காப் பாத்துக் கொள்ளுங்கள் எண்டு சொன்னேன். அடையாளத்தைக் காட்டுறதுக்காக உன்ரை படத்தையும் அவருக்குக் காட்டினனான். நல்ல தங்கமான மனிசன். அவரைத்தான் தேடுறன்” என்றார் அப்பா.

“அவர் சிங்களவரா?”

எனக்கு மூச்சுத் திணறியது. இடம் சூழ்நிலை என்பவற்றை அளவுகோல்களாக வைத்துக் கொண்டு மனிதர்களை எடை போடுவது தவறாகிவிடுமோ?

”அப்பெல்லாம் நீ சின்னனா இருக்கேக்கை உப்பாலி மாமா உனக்கு சொக்கிளேற் வாங்கித் தந்து விடுவார். கொப்பி புத்தகங்கள் வாங்கித் தருவார். ஒருமுறை உப்பாலி மாமா உனக்கொரு பேனாக் கத்தி வாங்கித் தந்திருந்தார். நான் அதை யாழ்ப்பாணம் வரேக்கை கொண்டு வருவேன் என்று உனக்கொரு கடிதம் போட்டிருந்தேன். விடுமுறையில் வீட்டிற்கு நான் வந்தபோது, எனது பாக்கைப் பறித்து ஒவ்வொன்றாகக் கிளறிப் பார்த்தாய். பேனை, பென்சில், பென்சில் சீவும் கத்தி, ஏன் சொக்கிளேற் எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, “எங்கேயப்பா பேனாக்கத்தி?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாய். அப்போது அந்தப் பென்சில் சீவும் கத்தியத் தந்து, “இதுதான் பேனாக்கத்தி” என்று நான் சொன்னபோது எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சம். இப்ப ஞாபகமிருக்கா அஞ்சலை?” அப்பா கேட்டார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் குழப்பத்தில் இருந்தேன். புகையிரதத்திற்குள் நடந்தவற்றைச் சொன்னேன். அப்பா ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக் கொண்டார்.

“அட… உபாலிக்குத் தமிழும் தெரியாது, இங்கிலிசும் தெரியாது. அதுதான் எல்லாத்துக்கும் காரணம்.

நான் கொழும்பில் வேலைக்குச் சேர்ந்தபோது, உப்பாலி அங்கே றைவராக இருந்தான். இப்பவும் றைவராகத்தான் அங்கே இருக்கின்றான். எனக்குச் சகலதும் அப்ப அவன் தான். நான் எனது ஐந்து சகோதரிகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டுத்தான் மணம் முடித்தேன். அதுவரை காலமும் அவனுடன் தான் இருந்தேன்.

உப்பாலிக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் தன் பதினேழாவது வயதில் நிமோனியா வந்து இறந்து போனாள். அதுக்குப்பிறகு உப்பாலியின் வாழ்க்கை வெறிச்சோடிப் போய்விட்டது” சொல்லிக்கொண்டே போனார் அப்பா.

எனக்கு இப்போது உப்பாலி மாமா, இன்னொரு அப்பாவாகத் தெரிந்தார்.

கடைசி ஸ்ரேசன் மருதானையில் இறங்கும்போது எங்களின் பின்னால் உப்பாலி வந்து நின்றார். அப்பாவின் தோள்களைத் தொட்டு அணைத்துக் கொண்டார். அப்பாவிடம் இருந்த பாக்குகளைப் பறித்து தான் தூக்கிக் கொண்டார். எதுவுமே நடக்கவில்லை என்பதுமாப்போல் முன்னாலே
நடந்து கொண்டிருந்தவர், திரும்பி என்னைக் கடைக்கண்ணால் பார்த்தார். அப்போது எனது கண்களில் நீர் கோர்த்திருந்தது.