Tuesday 14 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 38

Rate this posting:
{[['']]}
 வாழைக்கன்றுகள்

நான் உங்களை எப்பவும் தொந்தரவு பண்ணுறேன்னு பொய் சொல்லாதிங்க! 

இல்ல சீலி, உண்மைதான்! உன்னோட விசா அப்ரூவ் ஆகிடுச்சு! நான் இப்பதான் ஆன்லைனில் பார்த்தேன், உடனே உனக்குச் சொல்லாம் என்று தான் கால் பண்ணினேன். 

அப்படியா! என்னால நம்பவே முடியல, ரெம்ப சந்தோசமா இருக்கு, எத்தனை மாத காத்திருப்பு? சரிசரி! நான் எப்ப கிளம்பனும்? 

விட்டால் நாளைக்கே கிளம்பிடுவ போல! கொஞ்சம் பொறு! உன்னோட பாஸ்போர்ட்ல அப்ரூவ் ஆன விசாவை ஸ்டாம்பிங்க் செய்து வாங்க வேண்டும். 

அய்யயோ! அதக்கு எத்தனை மாசம் ஆகும்? 

அதற்க்கெல்லாம் மாதக்கணக்கு ஒன்றும் ஆகாது, ஒரு வாரத்தில் முடிந்து விடும், உன்னுடைய பாஸ்போர்ட்,போட்டோ,மேரேஜ் சர்டிபிகேட் எல்லாம் ரெடியா எடுத்து வைத்துக் கொள், நாளைக்கே டிராவல்ஏஜெண்டுக்கு அனுப்ப வேண்டும். 

அதெல்லாம் ஆறு மாசமா ரெடியாதான் இருக்கு!

ரெம்பதான் நக்கலு! சரிசரி! நான் டிராவல்எஜெண்டிகிட்ட பேசிட்டு ராத்திரி கால் பண்ணுறேன்! 

இப்பதாங்க எனக்கு ரெம்ப சந்தோசமா இருக்கு! நீங்க சாப்டீங்களா? 

அங்க உனக்குத் தான் சாப்பாடு டைம், நான் இப்பதான் டிபன் சாப்டேன், சரி போனை வை, அப்புறம் பேசுறேன். 

சரிங்க! அப்ப வைக்கிறேன்! ம்ம்ம்ம் என்று அலைப்பேசியில் கணவன் டேவிட்டுடன் பேசிவிட்டு, பல் முன்வரிசை தெரியும்படி சிரித்தவாறு படுக்கையறையிலிருந்து வெளிவந்த சீலி, நடுக்கூடத்தில் தொலைக்காட்சி தொடரில் லயித்திருந்த அவள் அம்மா லீமாரோஸின் முதுகில் சாய்ந்து, யம்மா! என்னோட விசா அப்ரூவல் ஆகிடுச்சாம்! நாளைக்கே பாஸ்போட்டை டிராவல் ஏஜென்சிக்கு அனுப்பனுமாம், என்றாள்.

உண்மையா, மோளே!, அந்த அந்தோனியாருக்கு தான் நன்றி சொல்லனும்! எப்படியோ ஒரு வழியா கிடைச்சிருச்சு, எத்தனை மாசம் ஆச்சு? இன்னைக்கு வந்திரும், நாளைக்கு வந்திரும் என்று சொல்லிசொல்லியே ஆறு மாசம் ஓடிடுச்சி! அப்பா தான் தொலைப்பேசியில் அழைக்கும் போதெல்லாம், ஓயாமல் கேட்டுகிட்டு இருப்பார், இப்ப இதை கேட்டா! ரெம்ப சந்தோச படுவார்! 

ஆமா அம்மா, சவுதியில் நாளுக்கு ஒரு சட்டம் நடைமுறைக்கு வருமென்று அவங்க சொல்லுவாங்க! எது எப்படியோ? விசா கிடைத்த வரைக்கும் சந்தோசமே! என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே, டேபிளில் இருந்த தொலைப்பேசி அலற, மோளே! கேரளாவிலிருந்து அப்பா தான் பேசுவாங்க! போனை எடு! என்று லீமாரோஸ் சீலியிடம் சொல்ல, சீலி டேபிள் அருகில் சென்று தொலைப்பேசியை எடுத்து அப்பா! என்னோட விசா அப்ரூவ் ஆகிடுச்சு! என்று சிரித்தார்.

டேவிட் மற்றும் சீலிக்கு திருமணம் முடிந்து சரியாக ஒன்றரை வருடம் ஆகிறது, டேவிட் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இருப்பது சென்னை. திருமணத்திற்கு முன்பு டேவிட் சில வெளிநாட்டு ப்ராஜெக்ட்களில் வேலை செய்தான், திருமணம் முடிந்தவுடன் சீலியுடன் வந்து சென்னை அலுவலகத்தில் பணியில் சேர்ந்துவிட்டான்.

ஊரில் டேவிட்டின் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் தான் சீலியின் வீடு, டேவிட்டின் தூரத்து உறவினர் ஒருவர் மூலமாக தான் சீலியின் திருமணம் டேவிட்டுடன் நிச்சயிக்கப் பட்டது. அவர், டேவிட் குடும்பத்தில் சீலியை பற்றிப் பேச வரும் போது முதலில் சொல்லியது பெண்ணின் அப்பா ரெம்பவே நல்லவர், மிகவும் கஷ்டபட்டு பிள்ளைகள் எல்லோரையும் நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார், அதனால் இந்தத் திருமணத்தை நம்பி நடத்தலாம் என்பது தான். சீலியின் அப்பா நிக்கோலாஸ், கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அம்மா லீமாரோஸ் மற்றும் ஒரு அண்ணன்,தம்பி. சீலியின் அண்ணனின் பெயர் பெனடிட்,இப்போது பெங்களூரில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார்,தம்பி ராபர்ட் ஊரில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து கொண்டிருக்கிறான். சீலியின் படிப்பும் குறைவில்லை, கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, ஆசிரியர் பணிக்கான பி.எட் முடித்து திருமணத்திற்கு முன்புவரை டவுனில் இருந்த தனியார் கான்வெண்ட் பள்ளியில் ஆசிரியராக வேலைப்பார்த்து வந்தார். 

சீலி பத்தாவது வகுப்பை முடிப்பதற்கு முன்பே, நிக்கோலாஸ் வளைகுடா நாடான ஓமான் நாட்டிற்குக் கட்டிட வேலைக்காக மூன்று முறை சென்று வந்திருந்தார். அதில் சம்பாதித்திருந்த பணத்தைக் கொண்டு, குடும்ப சொத்தான ஐந்து செண்டில் ஒரு காங்கீரிட் வீட்டைக் கட்டிவிட்டார். வீட்டின் பின் பக்கத்தில் நான்கு செண்டு நிலத்தையும் வாங்கிப் போட்டிருந்தார். ஆறு வருடங்கள் ஓமான் நாட்டில் வேலை செய்தார், வளைகுடா போர்கள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். மூன்று மாதம் விடுமுறையில் வந்த நிக்கோலாசை திரும்பச் செல்ல குடும்பத்தினர் எவரும் அனுமதிக்கவில்லை. வங்கியில் இருந்த மொத்த சேமிப்பையும் சேர்த்து ஊருக்கு வெளியே ஐம்பது செண்டில் விவசாய நிலம் ஒன்றையும் வாங்கிப்போட்டார். அதன் பிறகு தனது அண்ணனுடன் சேர்ந்து கேரளாவிற்குக் கட்டிடவேலைக்குச் சென்றார்.

சீலி சிறுவயதிலிருந்தே அப்பா செல்லமாக வளர்ந்து வந்தார், பள்ளியில் படிக்கும் போது வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டு போகும் கரும்பலகையில் ஆசிரியர் போட்டுக்கொடுக்கும் வெரிகுட்டை அழிக்காமல் மாலையில் பள்ளி முடிந்து, வீட்டிற்கு வந்து நிக்கோலாஸிடம் காட்டிவிட்டுத்தான் மறுநாளுக்கான வீட்டுப்பாடங்களை கரும்பலகையில் எழுதுவாள். தமிழ் எழுத்துக்கள் எழுதத் தெரிந்தாலும், வேண்டுமென்று நிக்கோலாஸின் கையால் தனது கையைப்பிடித்து எழுதச் சொல்வாள். வீட்டிற்கு உறவினர்கள் யார் வந்தாலும் நிக்கோலாஸ் அவர்களிடன் " சீலி மோளு பள்ளி முடித்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடங்களை எல்லாம் முடித்து என்னிடம் காட்டிவிட்டு தான் விளையாடப் போவாள் " என்று பெருமை பேசுவார்.
 
கோட்டவிளை சிலுவைராயன் என்றால் பக்கத்து ஊரில் உள்ளவர்களுக்குக் கூட தெரியும், கட்டிடவேலையில் அந்த காலத்தில் கொடிகட்டி பறந்தவர். உள்ளுரில் ஐம்பது, அறுபது வேலையாட்களை வைத்து கட்டிடவேலை எடுத்துச் செய்யும் கண்டிராக் சிலுவைராயரிடம் தான் நிக்கோலாஸ் கொத்தனாராக வேலை செய்து வந்தார். கட்டிட தொழிலில் கடினமான வேலையென்றால் கருங்கல் கட்டுவது தான், அதை விரும்பிக் கேட்டு செய்பவர் நிக்கோலாஸ்.

ஆளுயரத்திற்கு மேல் மதில்சுவர் கருங்கல்லினால் கட்ட வேண்டுமானாலும் கையாள் ஒருவனை வைத்துக்கொண்டு ஒற்றையாளாக நிக்கோலாஸ் அடுக்குவார். நீ! தினமும் எப்படி தான் கருங்கல்லோடு மாரடிக்கிறியோ? நானெல்லாம் ஒரு நாள் கருங்கல் வேலை செய்தாலே மறுநாளே நெஞ்சை பிடிச்சிட்டு நடக்க வேண்டியதா இருக்கிறது என்று நண்பர்கள் கேட்டால், கருங்கல் வேலை செய்ய ஒரு நேக்கு வேணும்டே,உங்களுக்குக் கல்லை முதலில் சுத்தி புடிச்சு சரியா கணப்பு தட்டத் தெரியாது, அப்புறம் எங்க அடுக்கிறது என்று கிண்டல் அடிப்பார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் இருக்கும் நாயர் கடையிலிருந்து மோதகமும்,பருப்பு வடையும் ஒரு பார்சல் வாங்கிவிட்டுத் தான் வீட்டிற்குச் செல்வார்.

நிக்கோலாஸ் வேலை முடிந்து வருவதை எதிர்பார்த்துத் தான் சீலியும் அவள் அண்ணன் பெனடிட்டும் காத்திருப்பார்கள், தெருவில் அவர் வருவதை பெனடிட் பார்த்துவிட்டால் போதும் ஓடிச்சென்று கையில் இருக்கும் பார்சலை வாங்கி விடுவான், இவன் ஓடுவதைப் பார்த்து சீலியும் அவன் பின்னால் ஓடுவாள், ஓடிச்சென்று நிக்கோலாசின் கையில் ஏறி அமர்ந்து கொள்வாள். மோளே! அப்பா உடம்பெல்லாம் அழுக்கு! என்று நிக்கோலாஸ் சொன்னாலும் கேட்க மாட்டாள். வேலையில் பட்ட காயங்களுக்கு மருந்து போட வேண்டும் என்று நிக்கோலாஸ் சொன்னால் போதும், ஓடிச்சென்று மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்களில் காயத்திரிமேனி எண்ணெய்யை எடுத்து வந்து "எங்கப்பா காட்டுங்க?" என்று அமந்துவிடுவாள். நிக்கோலாஸின் கைகளில் காய்த்திருக்கும் காய்ப்புகளைப் பார்த்து "ஏம்பா உங்க கையெல்லாம் இவ்வளவு இறுக்கமா இருக்கு?" என்று கேட்பாள். "அப்பா கரண்டி பிடிச்சி வேலை செய்யுறேன் இல்ல, அதான் இப்படி இருக்கு" என்று சொன்னால்" அப்பா பாவம்!! என்று சொல்லி கொஞ்சுவாள்.

நிக்கோலாஸின் ஒற்றை வருமானம், குடும்ப செலவுகளை கவனிப்பதற்கும், மூன்றுபேரின் மேற்ப்படிப்புகளைத் தொடர்வதுக்கும் போதுமானதாக இருக்கவில்லை, லீமாரோஸ் சுயஉதவிக் குழுக்களிலும், உறவினர்களிடமும் கடன் வாங்கி தான் சமாளித்தார், ஒரு கட்டத்திற்கு மேல் கடனை சமாளிக்க முடியாமல் ஊருக்கு வெளியில் வாங்கிப்போட்டிருந்த வயலில் பாதியை விற்றனர். பெனடிட் ஒரு வழியாக பொறியியல் படித்து முடித்திருந்தான், ஆனால் வேலை உடனடியாக கிடைக்கவில்லை. சீலியும் கல்லூரியில் கணிதம் இளங்கலை படித்து முதுகலை முடித்திருந்தார். நிக்கோலாஸ் சீலியை ஆசிரியராக ஆக்க வேண்டும் என்று விரும்பியதால் பி.எட் படிக்கவைக்க மீதமிருந்த வயலில் கைவைத்தார்.

நிக்கோலாஸ் வயலை விற்ற சில மாதங்களிலேயே பெனடிட்டிற்கு பெங்களூரில் ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் வேலைக்கிடைத்தது, நிக்கோலாஸிற்கு அது மிகப்பெரிய சந்தோசமாக இருந்தது, அடுத்த வருடமே சீலியும் பி.எட் முடித்து ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்துவிட்டார். சீலி பெரும்பாலும் சுடிதார் தான் விரும்பி அணிவார், ஆசிரியராகப் பள்ளிக்கு செல்லும் போது மட்டும் சேலைக் கட்டி செல்வார். நிக்கோலாஸிற்கும் மகள் சேலை கட்டியதைப் பார்த்தால் அளவில்லா சந்தோசம், முகத்தில் பெருமிதம் பொங்க "சீலி மோள் சேலை கட்டினால் டீச்சருக்கான இலட்சணம் வந்துவிடுகிறது" என்று பாராட்டுவார்.

சில வருடங்களில் சீலிக்கும் டேவிட்டுக்கும் திருமணம் நடைபெற்றது, சீலிக்கு மாப்பிள்ளை பக்கத்து ஊரிலேயே கிடைத்ததில் நிக்கோலாஸிற்கு ரெம்பவே சந்தோசம், ஆனால் திருமணம் முடிந்த கையோடு டேவிட்டும்,சீலியும் சென்னை புறப்பட்டுச் சென்றது ஒரு பிரிவை கொடுத்தது போலவே உணர்ந்தார். நிக்கோலாஸ் கேரளாவிலிருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் டேவிட்டும் சென்னையிலிருந்து சீலியைக் கூட்டி கொண்டு ஊருக்கு வந்து விடுவான். சீலியின் திருமணத்திற்கு மண்டபம் சரியாக அமையாததால், நிக்கோலாஸ் தனது வீட்டிற்குப் பின்புறம் வாங்கிப் போட்டிருந்த அந்த நான்கு செண்டு நிலத்தைத் திருத்தி அதில் தான் பந்தல் போட்டிருந்தார். பந்தல் பிரித்த கையோடு அந்த நிலத்தில் முப்பது வாழைக்கன்றுகளை வாங்கி நட்டிருந்தார், கேரளாவிலிருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் அந்த வாழைக்கன்றுகளை பராமரிப்பதில் தான் பொழுதை போக்குவார். சீலி சென்னையிலிருந்து வந்திருந்தால் அவளையும் "மோளே தோட்டத்துக்கு வந்து பாரு! வாழை எல்லாம் எப்படி வளர்ந்திருக்கு" என்று கூட்டி செல்வார்.

சீலி ஊருக்கு வரும் போதெல்லாம் நிக்கோலாஸிடம் அப்பா! எப்போது சென்னைக்கு வருவீர்கள்? என்று கேட்டு கொண்டே இருந்ததால், "மோளே! இந்த வருடம் கிருஸ்துமஸ்க்கு நானும் உன் அம்மாவும் சென்னையில் உன்னோடு தான்" என்று சொல்லியிருந்தார்,அவர் சொல்லிய சில மாதங்களில் டேவிட்டிடம் மேனேஜர் "புதிய ஒரு ப்ராஜெக்ட் ஒன்று சவுதியில் வந்திருக்கிறது, உங்களுக்குப் போக விருப்பமென்றால் சொல்லுங்கள்! பேமிலி ஸ்டேட்டஸ் தருகிறேன்" என்றார், டேவிட் யோசித்துச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு, வீட்டிற்கு வந்து சீலியிடம் விசயத்தைச் சொன்னான். சவுதியில் உள்ள கட்டுப்பாடுகள் பற்றி ஊரில் கதைகள் பல சீலி கேட்டிருந்ததால் அவருக்கு விருப்பம் குறைவுதான்.

அந்த வருட ஆயுதபூஜை விடுமுறையில் டேவிட்டும் சீலியும் ஊருக்கு வந்திருந்த போது நிக்கோலாஸும் கேரளாவிலிருந்து வந்திருந்தார், பெனடிட்டும் பெங்களூரிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்ததால் சீலியின் வீட்டில் கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது. எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் மாலைப்பொழுதில் டேவிட் தனக்குச் சவுதியில் வந்திருக்கும் ப்ராஜெக்ட் பற்றிச் சொன்னான், இப்ப சவுதி எல்லாம் போக வேண்டாம், இந்த வருஷம் படிப்பு முடிக்கும் சின்னவன் ராபர்ட்டிற்கு பெனடிட் அவனுடைய பெங்களூர் கம்பெனியின் சென்னை பிரஞ்சில் ஒரு வேலைக் கேட்டு வைத்திருக்கிறான், நீங்க அங்க இருக்கிற தைரியத்தில் தான், அவனைச் சென்னைக்கு அனுப்பச் சம்மதித்தேன், ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில் போகிறேன் என்றால் எப்படி? என்று லீமாரோஸ் கேள்வியெழுப்ப, அமைதியாக இருந்த நிக்கோலாஸ், எந்த திசைக்கு போனாலும் நம் பிள்ளைகள் இல்லையென்று ஆகிவிடுமா! அவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்கு நாமே முட்டுக்கடையாக இருக்கலாமா! நம் பிள்ளைகள் புதிய இடங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் காலூன்றி நிற்கும்போது நமக்குத்தானே பெருமை! என்று லீமாரேஸிடம் சொல்லிவிட்டு, "மருமோனே நீங்கச் சவுதிக்கு போக வேண்டிய வேலைகளைப் பாருங்கள்" என்று டேவிட்டை பார்த்துச் சொன்னார்.

ஒருமுறை நிக்கோலாஸ் வீட்டின் பின்புறம் உள்ள வாழைத்தோட்டத்தில் தார் வெட்டிய வாழை மரத்திலிருந்த கன்றுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி தனியாக எடுத்து வேறு இடத்தில் நடுவதற்குக் குழி எடுத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த டேவிட், எதற்கு மாமா! கன்றுகளை பிடுங்கி வேறு இடத்தில் நடுகிறீர்கள்? அப்படியே விட்டால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து தண்ணியும், உரமும் எடுத்து நல்லா வளரும் தானே! என்று கேட்ட போது "இல்ல மருமோனே! தாய் வாழையிலிருந்து கன்றுகளை எல்லாம் தனியாக எடுத்து புது இடத்தில் நட்டால் தான், அதற்கான கிழங்கையும், வேரையும் மண்ணில் ஊன்றி வளரும், வளர்ச்சியும் நன்றாக இருக்கும்" என்றது டேவிட்ற்கு வினோதமாய் இருந்தது.

டேவிட் சென்னை அலுவலகத்திற்கு சென்று சவுதி செல்வதற்கான தேதியை முடிவுசெய்து, சீலியை உடன் அழைத்து வந்து ஊரில் விட்டுவிட்டு திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் சவுதிக்குக் கிளம்பினான். சவுதி கிளம்புவதற்கான டிக்கெட் டேவிட் கைக்கு வந்த அன்றிலிருந்தே சீலியின் முகத்தில் மகிழ்ச்சியில்லை, ஒரு மாதத்தில் அவளுக்கும் விசா எடுத்து, திரும்ப வந்து அழைத்துக் கொள்வதாக சொல்லும் நேரம் சிரித்தாலும், சீலியால் இயல்புநிலைக்கு முழுமையாக மாற முடியவில்லை.

டேவிட் சவுதி வந்து பணியில் சேர்ந்தவுடன், சீலிக்கு விசா எடுப்பதற்கான முயற்சியில் இறங்கினான். சவுதியில் ஒருநாள் இருக்கும் சட்ட நடைமுறை மறுநாள் இருப்பதில்லை, விசா எடுப்பதற்குத் தேவையான டாக்குமெண்டுகளை சரி செய்யவே மூன்று மாதம் பிடிக்கும் என்று கம்பெனி பிஆர்ஓ சொன்னான். டேவிட் எப்படியோ சீலியிடம் பேசி மூன்று மாதம் கழித்து தான் உன்னைக் கூட்டி வரமுடியும் என்று சமாதானம் செய்தான். ஆனால் மூன்று மாதம் கழித்தும் டேவிட்டிற்கு விசா கிடைக்கவில்லை, சவுதியில் விசா அப்ரூவல் அனைத்தும் ஆன்லைன் மூலம் என்ற புதிய நடைமுறை அமுலுக்கு வந்ததால் இன்னும் ஒரு மூன்று மாதம் காத்திருக்க வேண்டி வந்தது. ஒரு வழியாக டேவிட் சவுதி வந்து ஆறு மாதம் தாண்டிய பிறகு தான் சீலிக்கு விசா கிடைத்தது. அதுவரையிலும் டேவிட்டை விட அவனுடைய மாமனார் நிக்கோலாஸுதான் சீலியைச் சமாதான படுத்தியது, சீலி, இன்னும் விசா கிடைக்கவில்லை! எப்பொழுது தான் கிடைக்குமோ? என்று சலிக்கும் போதெல்லாம் நிக்கோலாஸ், "மோளே! ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஈசியா போவதற்கு நாம என்ன, இந்த நாட்டின் பிரதமரா!, கொஞ்சம் முன்னாபின்னா இருக்கும்" என்று சிரிப்பார்.

ஊரில் தவக்காலம் தொடங்கியிருந்தது, துக்க வெள்ளியையும், ஈஸ்டர் பண்டிகையும் திட்டமிட்டு ஊருக்குச் செல்வதற்கு டேவிட் டிக்கெட் புக் செய்தான், பண்டிகைகளை முடித்த ஒரு வாரத்தில் சீலியை அழைத்துக்கொண்டு திரும்பவருவது என்று முடிவுசெய்து கம்பெனியில் விடுமுறை வாங்கியிருந்தான். ஊருக்குக் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்னால், டேவிட் கேரளாவில் இருக்கும் தனது மாமனார் நிக்கோலஸிற்கு போன் செய்தான், மருமொனே! நல்லாயிருக்கிய இல்லா! மோளுக்கு விசா அப்ரூவ் ஆனதில் ரெம்ப சந்தோசம்! ஒரு கட்டட வேலையில் கொஞ்சம் திறுதி, நீங்க துக்க வெள்ளிக்கு தானே வர்றீங்க! "வாங்க! நான் ஊர்ல காத்திருப்பேன்!" என்று சந்தோசமாக பேசினார்.

டேவிட் ஊருக்குச் செல்வதற்கு விமானநிலையத்தில் காரில் கொண்டுவிட்ட மலையாளி சேட்டாவிடம் “நன்றி” சொல்லிவிட்டு ஹேண்ட் டிராலியை தள்ளிக்கொண்டு நேராக எமிக்கிரேசன் வரிசைக்குச் சென்றான். எல்லா வரிசையிலும் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது, டேவிட் தன்னுடைய பஸ்போர்ட்,டிக்கெட்,எக்சிட் மற்றும் ரிஎண்டிரி பேப்பர் எல்லாவற்றையும் ரெடியாக வைத்துக் காத்திருந்தான். வரிசை மெதுவாக நகர்ந்தது, இவனுக்கு முன்னால் இரண்டு பேர் இருக்கும் போது டேவிட்டின் மொபைல் அலறியது, அவசர அவசரமாக பாக்கெட்டில் கைவிட்டு சைலண்டில் போட்டுவிட்டு யார் என்று பார்த்தான், வீட்டிலிருந்து அவன் அண்ணன் அழைத்திருந்தான், இப்போது டேவிட்டின் முன்னால் இருந்தவன் எமிக்கிரேசன் கவுண்டரில் நின்றான். அடுத்த நபர் தான் என்பதால் போனின் பேசாமல் சைலண்ட் மோடில் பாக்கெட்டில் போட்டிருந்தான்.

டேவிட்டின் அண்ணன் இந்நேரம் டேவிட்டை அழைக்க வேண்டிய முகாந்திரம் எதுவுமில்லை, காரணம், அறையிலிருந்து விமானநிலையத்திற்கு கிளம்புவதற்கு முன்னால் தான் மறுநாள் காலையில் திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு தான் வந்துசேரும் நேரம் மற்றும் பிளைட் நம்பர் போன்ற விபரங்களைச் சொல்லி இனி காலையில் தான் பேசுவேன் என்று சொல்லிவந்திருந்தான். இப்போது எதற்க்காக அழைக்கிறான் என்று சிந்தித்தவாறு எமிக்கிரேசனை முடித்து லக்கேஜை கன்வேயரில் போட்டுவிட்டு, ஹேண்ட் லக்கேஜ் மட்டும் எடுத்துக் கொண்டு ஓய்வறையை நோக்கி நடந்தான்.

டேவிட் சைலண்டில் இருக்கும் மொபைலை எடுத்துப் பார்க்கும் போதும் பிரதர் காலிங் என்று திரையில் வெளிச்சம் வந்து நின்றது. அண்ணனிமிருந்து மட்டும் பதினாறு மிஸ்டு கால் வந்திருந்தது, வேறு சில புது எண்களும் லாகில் இருந்தது, டேவிட்டின் விரல்கள் மட்டும் பதட்டத்துடன் அண்ணனின் எண்ணிற்கு டயல் செய்தது, காதில் வைத்து ஹோலோ! என்ன பிரச்சனை! என்று கேட்டபோது சம்பந்தமில்லாத விசாரிப்பும், தடுமாற்றமும் குரலில் தென்பட்டது, என்ன பிரச்சனை என்று திரும்பவும் கேட்க, சிறிது மவுனத்திற்குப் பிறகு "உன்னோட மாமனார் தவறிவிட்டார்! கேரளாவில் வேலையில் இருக்கும் போது “ஹார்ட் அட்டாக்” வந்திருக்கிறது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்திருக்கிறார்" என்று குரல் தாழ்த்திப் பேசினான். டேவிட்டின் வாயிலிருந்து எந்த வார்த்தையும் வெளிவரவில்லை, நாக்கு குழறியது, ஹார்ட் பீட்டின் ஒலி அடங்க மறுத்தது. தொடர்ந்து டேவிட்டின் அண்ணனே பேசினான், இன்றைக்கு இரவே கேரளாவிலிருந்து கொண்டு வந்துவிடுவார்கள், நீ வருகிறாய் என்பதால் தான் நாளைக்கு மாலையில் அடக்கசடங்கு வைத்திருக்கிறார்கள் என்றான், டேவிட்டால் எதுவும் பேச முடியவில்லை!, நீண்ட ஒரு மூச்செடுப்பிற்கு பின்பு, தனக்கு இனி யாரும் கால் செய்யவேண்டாம் என்றும், நாளைக் காலையின் நீ மட்டும் கார் கொண்டு விமானநிலையத்திற்கு வந்தால் போதும் என்று சொல்லி மொபைலை அணைத்தான்.

மொபைலை அணைத்த டேவிட்டிற்கு விமானநிலையமே சூனியமாக தெரிந்தது, அவனைச் சுற்றி பலர் பரபரப்பாக இருந்தாலும் தனிமையாகவே உணர்ந்தான். மாமனாரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சீலியைப் பற்றிய நினைவுகள் கண்முன்னே தோன்றி விரிந்தது. அவன் முன்னால் எங்கோ தூரத்தில் நட்டுவைத்திருந்த வட்டவடிவிலான இரும்புத்தூணை வெகு நேரமாக வெறித்துக் கொண்டே இருந்தான்.

டேவிட் தனது வாழ்நாளிலேயே மறக்க முடியாத விமான பயணமாக இது அமையும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை, தனது சிந்தனைகள் தன்னை இயக்கவில்லை என்பதை உணர்ந்திருந்தான். காலையில் விமான நிலையத்தில் தனக்காக காத்திருந்த அண்ணனிடம் லக்கேஜிகளை எடுக்கச் சொல்லிவிட்டு காரில் பின் பக்கத்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தான். கேரளாவிலிருந்து புதன்கிழமை வேலை முடித்துவிட்டு ஊருக்கு வருவதாகத் தான் இருந்தது, ஆனால் அந்த கட்டிடத்தில் கொஞ்சம் காங்கீரிட் போட வேண்டிய வேலையை முடித்தால் தான் சம்பள பாக்கியை தருவேன் என்று வீட்டு உரிமையாளர் சொல்லியதால் அவருடைய அண்ணனும் வியாழக்கிழமை காலையில் அந்த காங்கீரிட்டை மட்டும் முடித்துவிட்டு மதியம் இருவரும் சேர்ந்து ஊருக்குப் போகலாம் என்று சொல்லியிருக்கிறார், இல்லையென்றால் ஒருநாள் முன்னாடியே உன்னோட மாமனார் வந்திருப்பார் என்று டேவிட்டின் அண்ணன் காரின் ஓட்டுநர் இருக்கையின் பக்கத்தில் அமர்ந்து சொல்லி கொண்டிருந்தான்.

வேலை செய்யும் போது அவருக்கு எதுவும் நடக்கவில்லை, அந்த காங்கிரீட்டை பதினோரு மணிக்கெல்லாம் முடித்துவிட்டு, ஊருக்குக் கிளம்புவதற்காக, தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து குளித்துவிட்டு துணியைத் துவைக்கும் போது தான் நெஞ்சுவலி வந்திருக்கிறது, அறையில் வேறு எவரும் இல்லையாம், அவருடைய அண்ணனும் சம்பள பாக்கி பணத்தை வாங்க வீட்டு உரிமையாளரைப் பார்க்க சென்றிருக்கிறார். பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் தான், இவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கத்துவதை பார்த்து அவருடைய அண்ணனுக்குப் போன் பண்ணியிருக்கிறார்கள், அவர் வந்தபிறகு தான் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள், செல்லும் வழியில் இறந்திருக்கிறார் என்று டேவிட்டின் அண்ணன் சொல்லச்சொல்ல டேவிட்டின் கண்களில் நீர் வழிந்தது.

விமானநிலையத்திலிருந்து நேராக வீட்டிற்கு வந்து கொண்டுவந்த லக்கேஜை மட்டும் வைத்துவிட்டு டேவிட்டும், அண்ணனும் இருசக்கர வாகனத்தில் சீலியின் வீட்டிற்குச் சென்றனர், வீட்டை நெருங்கும் போதே வழியெங்கும் ஆட்களாக இருந்தார்கள், எல்லோரும் இவர்களின் வருகையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், வீட்டில் நடுக்கூடத்தில் நாடிகட்டுடன் கிடத்திவைக்கப் பட்ட மாமாவை நெருங்குவதற்குள், அழுதுகொண்டிருந்த சீலி ஓடி வந்து அப்பா! உங்க மருமவன் வந்திருக்காங்க, கண் திறந்து பாருங்க என்று டேவிட்டை கட்டிப்பிடித்து அழுதாள். "மோளையும், மருமோனையும் வெளிநாட்டிற்கு வழியனுப்ப வருவேன்னு சொன்னிங்களே அப்பா!" என்று ஒருமுனையிலிருந்து டேவிட்டின் மாமியார் லீமாரேஸ் அழ, டேவிட் சீலியை தாங்கி பிடித்து தன் கண்களில் வழிந்த நீரை கையால் துடித்தான்.

சிறிது நேரத்தில், இனி ஆக வேண்டிய காரியங்களை பார்க்கலாம்!, என்று உறவினர்கள் சிலர் நிக்கோலாஸை நெருங்க, சுற்றியிருந்த பெண் உறவினர்களின் அழுகை குரல் அதிகமாகியது. வீட்டிற்கு வெளியில் எடுத்து சென்று உறவினர்கள் நிக்கோலாஸின் உடம்பைக் குளிப்பாட்ட தொடங்கியிருந்தார்கள். டேவிட்டின் மாமியாரும், சீலியும் நெஞ்சில் அறைந்து அப்பா!! என்று கதறியது டேவிட்டை நிலைகுலைய செய்தது, எழுந்து சென்று வீட்டிற்குப் பின்னால் வாழைத்தோட்டத்தை பார்த்தபடி கட்டப்பட்டிருந்த ஒட்டுசுவரில் அமர்ந்தான், சில மாதங்களுக்கு முன் நிக்கோலாஸால், வாழைமரத்திலிருந்து பிரித்தெடுத்து தனியாக குழிதோண்டி நடப்பட்டிருந்த வாழைக்கன்றுகள் இன்று செழிப்பாக வளர்ந்து பூ விட்டிருந்தது.